வாசிப்பு
பகுதி - 2
மனிதனின் ஞானத்திற்கான பாதையை, மனிதன் தன் சிக்கலிலிருந்து விடுதலையாவதற்கான வழிமுறைகளை கிழக்கு மரபு மூன்றாக பிரிக்கிறது.
பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் என்று. சரணாகதியாக தன் வாழ்வை வாழ்வது; ஒவ்வொன்றையும் கடமையாக மேற்கொண்டு செய்து முடிப்பது; எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்துவது என்கிற மூன்று தளங்களில் மனிதனின் சிக்கல் விடுவிப்பு யுத்திகள் கிழக்கு மரபில் பரிந்துரைக்கப்படுகிறது.
எல்லா மரபையும் விடவும் ஒரு மனிதனின் ஞானத்தை, உயர்நிலையை, அறிவு மேன்மையை கிழக்கு சார்ந்த தத்துவங்களும் முறைகளும் போற்றிப் பாதுகாக்கின்றன.
அந்த வகையில் மனிதனின் பிறப்பு ஞானம் அடைவதற்கான இலக்கோடு இருக்கிறது என்று கிழக்கு மரபு மீண்டும் மீண்டும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறது.
வேற எந்த கண்டுபிடிப்பும் மேற்கத்திய மனோநிலையில் உருவாக்கியிருக்கிற எந்த செயல்பாட்டு யுத்தியும் ஆலோசனையும் மனிதன் ஞானம் அடைவதற்கான எந்த வேலையையும் செய்ததில்லை.
தன்னை விடுதலை நிலை நோக்கி நகர்த்திக் கொள்கிற எல்லா யுத்திகளும் கிழக்கில் செய்யப்படுகிற கிழக்கோடு தொடர்பிருக்கிற தன்மையிலேயே இருக்கின்றன. இருப்பதை பார்க்க முடிகிறது.
மேற்கத்திய மனோநிலையில் அதிக ஞானிகள் ஒப்பிட்டு அளவில் குறைவாகவே இருக்கின்றனர். முழுக்க சரணாகதியாக, விசாரணையாக, கடமையாக தன் வாழ்வின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்கிற, இசைந்து கொள்கிற, நகர்ந்து போகிற ஒரு மனித குணாம்சத்தை கிழக்கு பாரம்பரியம் மற்றும் வைத்திருக்கிறது. இத்தகைய மனித வாழ்விற்கான விடுதலைப் பாதையில் தன் அனுபவத்தை ஒரு மனிதன் பெற்று நகர்வதற்கு, புரிந்து கொள்வதற்கு மிக எளிய வழி இந்த யுத்திகளுக்கு பொருந்திப் போவது போல யுத்திகளுக்கு சமமான சிந்தனை திறன் கொண்ட எளிய வழி “வாசிப்பு”.
“வாசிப்பு” என்கிற சொல் தமிழில் ஒரு படைப்பாளிக்கான சொல். ஒரு இசைக்கலைஞர் தன்முன் இருக்கிற ஒரு இசைக்கருவியை அதற்குள் ஒலி எழுப்புகிற இயங்குமுறையில் தனக்கான இசைவில், தான் விரும்புகிற மனதிற்கு இதமான ஒன்றை பார்ப்பவருக்கு உணரச் செய்கிறார். இதற்குப் பெயர் அந்த இசைக் கருவியை வாசித்தல்.
எல்லா படைப்பாளிகளுக்கும் இந்த வாசிப்பு என்பது ஒவ்வொரு பொருளில் அளவிடப்படுகிறது. இருக்கிற ஒன்றை அதற்கே உரிய வரையறைகளை வைத்துக்கொண்டு தான் விரும்புகிறபடி புதிய ஒன்றாக இன்னொருவருக்கு பொருந்தாத ஒன்றாக அனுபவிக்கிற உணர்வை ஏற்படுத்திக் கொள்கிற நிலைக்கு வாசிப்பு என்று நான் பார்க்கிறேன்.
ஒரே புத்தகத்தை, ஒரே எழுத்துக்களை, ஒரே சொற்களை வேறு வேறு நபர்கள் அவரவர் விருப்பப்படி ரசிக்கவும் சிலாகிக்கவும் உரிய வாய்ப்பு வாசித்தலுக்கு உட்பட்டது.
நீங்கள் ஒரு கணிப்பொறியை, கணிப்பொறியில் இருக்கிற ஒவ்வொரு பொத்தானையும் யார் அழுத்தினாலும் ஒரே மாதிரியான வேலையைத் தான் அது செய்து கொண்டே இருக்கும். ஒரு வாகனத்தை நீங்கள் இயக்க வேண்டும் என்றால் நீங்கள் யாராக இருந்தாலும் அந்த வாகனம் எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்று குறிப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அப்படித்தான் நீங்கள் அந்த வாகனத்தை இயக்க முடியும். ஒரு விண்வெளிக்குச் செல்லுகிற விண்கலத்தை இயேசு கிறிஸ்து கூட அவர் விரும்பியபடி இயக்கி விட முடியாது. எத்தகைய ஞானியாக இருந்தாலும் விஞ்ஞானக் கருவிகளை, இயந்திரங்களை சமன்பாடுகள் வழியாக இயங்குகிற எந்த ஒன்றையும் அதற்கு உரிய முறையில் இயக்கினால் மட்டும்தான் அவற்றை செம்மையாக இயக்கவும் செம்மையாக படைக்கவும் முடியும். ஆனால் ஒரே வகையான எழுத்துக்களை, ஒரே வகையான சொற்றொடரை, ஒரே வகையான புத்தகத்தை, ஏதாவது ஒரு புத்தகத்தை கூட யார் ஒருவரும் தனக்கு விருப்பமான முறையில் வாசித்து உள்வாங்கிக் கொண்டு அனுபவிக்கிற அசாத்தியமான வாய்ப்பு வாசிப்பிற்குள் புத்தகங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.
வாசிப்பு நிலை என்பது ஒவ்வொருவரையும் அவர்கள் சுதந்திர வானில் பறப்பதற்கு வாய்ப்பளிக்கிறது. வாசிப்பு எல்லாவகையான விடுதலைக்கும் எல்லா வகையான சிக்கலுக்கும் விரைவாக கடந்து போவதற்கு, அடைந்து கொள்வதற்கு தேவையான எல்லாவற்றையும் கவனிக்க உதவுகிறது.
வாசிப்பு பழக்கம் ஒருவரை விடுதலை செய்யுமா என்றால் நிச்சயமாக விடுதலை செய்யாது. வாசிப்பு பழக்கம் ஒருவருக்கு எத்தகைய பலன் கொடுக்கும் என்றால் தான் எவ்வாறு இருக்கிறோம் என்பதை பார்த்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருக்கிற கருவி வாசிப்பு பழக்கம். ஒரு இசைகருவியை ஒரு இசைக்கலைஞன் அந்த கருவியின் இயந்திர நுட்பத்திற்கு உட்பட்டு ஒருவகையான பாடலை இசைப்பது போல, இன்னொரு இசைக்கலைஞன் அந்தக் கருவியின் இயந்திர தன்மைக்கு உட்பட்டு இன்னொரு வகையான பாடலை உருவாக்குவது எவ்வளவு ஆனந்தமான சாத்தியமோ அத்தகைய சாத்தியம் ஒரு புத்தகத்தின் வழியாக ஒருவர் பெற்ற அனுபவத்தை கவனிப்பதும் அதே புத்தகத்தின் வழியாக இன்னொருவர் இன்னொரு அனுபவத்தை பெற்றுக்கொள்ளவும் கவனிக்கவும் வாய்ப்பிருக்கிற ஓர் ஏற்பாடு புத்தகங்கள் வழியாக, புத்தகங்களை வாசிப்பது வழியாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
வாசிப்பு ஒரு படைப்பாளிக்கான துவக்க நிலை. தனித்தனியாக ஒருவரை வாசிக்கச் செய்தாலும் தனித்தனியாக ஒருவருக்குள் வாசிப்பு நிகழ்ந்தாலும் அவர் அளவில் அவரது வானம் முழுவதும் புத்தகங்களின் வழியாக அவர் சிறகடிக்கும் வாய்ப்பு, புத்தகங்கள் அவருக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றன வாசித்தலின் வழியாக..
No comments:
Post a Comment